கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது

பெங்களூரு, பிப். 2- கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது. இதை மீறி யாரேனும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய வைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் சித்தராமையா எச்சரித்தார். கர்நாடக சமூக நலத்துறையின் சார்பில் 4 ஆயிரம் துப்பரவு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கையால் மலம் அள்ளுவது, மலத்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வது போன்றவை நாட்டில் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆங்காங்கே இந்த அவலம் தொடர்வதை அனுமதிக்க முடியாது. மனித மாண்பை காக்க பசவண்ணர், பாபாசாகேப் அம்பேத்கர் போதித்த கொள்கைகளை கர்நாடக அரசு பின்பற்றிவருகிறது.கர்நாடகாவில் கையால் கழிவுகளை அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்க போராடி வருகிறோம். கையால் கழிவுகளை அகற்றுவதற்கு அனுமதி கிடையாது. யாரேனும் ஒரு நபரை கையால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிறுவனங்கள் கழிவு நீர் தொட்டிக்குள் ஆட்களை இறக்கினால் அதன் உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை வழங்கப்படும்.துப்புரவு பணியாளர்கள் கண்ணியமாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் முதல்வராகப் பதவியேற்றவுடன் துப்புரவு பணியாளர்களின் ஊதியத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தினேன். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.