கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம்

பெங்களூர், ஜன. 25-நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடந்ததை போலவே கர்நாடகாவிலும், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்தன. இந்நிலையில், பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மத்திய மற்றும் மாநில அரசின் ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசோ இந்த கோரிக்கைகளை கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. மட்டுமல்லாலது, பழைய ஓய்வூதிய திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் என சிலவற்றை பட்டியலிட்டது. அதாவது, இந்த திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டால், மாநிலங்களுக்கான வளர்ச்சி நிதியை சுருக்க வேண்டியதாக இருக்கும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 0.9 சதவிகிதம் குறையும், செலவுகள் 4.5 மடங்கு அதிகரிக்கும் என்று பட்டியலிட்டது. ஆனால், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கையில் விடாபிடியா இருந்தனர். காரணம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் ஒரு அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது ஊதியத்தில் பாதி, ஓய்வூதியமாக வழங்கப்படும். அதேபோல இந்த ஓய்வூதியம் பெறும் நபர் உயிரிழந்துவிட்டால் அவரது குடும்பத்திற்கு ஓய்வூதியம் வழங்கப்படும். ஓய்வுக்கு பின்னர் வழங்கப்படும் நிதிக்காக, அவர் வேலை பார்க்கும் காலத்தில் அவரது சம்பளத்திலிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யப்படாது. ஓய்வூதிய தொகை முழுக்க முழுக்க அரசு கருவூலத்திலிருந்து வழங்கப்படும். மட்டுமல்லாது 6 மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி கணக்கீட்டின்படி ஒய்வூதியம் உயர்த்தப்படும். இது எதுவும் புதிய திட்டத்தில் கிடையாது இந்நிலையில் கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.