பெங்களூரு: செப்.19 காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மேலாண்மை ஆணையத்தின் தலைவர் ஹால்தார் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் சந்தீப்சக்சேனா தலைமையில் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆனால் கர்நாடகா தரப்பில் அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. இதில் தமிழக அதிகாரிகள் தரப்பில் 12 ஆயிரத்து 500 கன அடி வீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தினர். ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதைத்தொடர்ந்து ஆணைய தலைவர் ஹல்தார் ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் கர்நாடகாக தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 7 ஆயிரத்து 7 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 171 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.06 அடியாக உள்ளது. கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 525 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1663 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 76.18 அடியாக உள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.