
ஓசூர், ஏப்.8-
கர்நாடக அரசு பஸ்கள் இயங்காததால் ஓசூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கர்நாடக மாநிலத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அந்த மாநில போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அங்கு பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
இந்த நிலையில், கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சென்னை, கோவை, வேலூர், மதுரை சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு தினமும் இயக்கப்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட கர்நாடக அரசு பஸ்கள் இயங்காததால் பொதுமக்கள், பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.
இதேபோல், பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. தொழிற்சங்கத்தினர் போராட்டத்தால் நேற்று ஓசூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஓசூர் பஸ் நிலையத்தில், பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
வெளியூர்களில் இருந்து பெங்களூருவின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு ஓசூர் வந்த ஏராளமான பொதுமக்கள் பஸ் நிலையத்தில் குழந்தைகளுடன் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆனால் தமிழக அரசு பஸ்களும், தனியார் பஸ்களும் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கும், கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் வழக்கம்போல் இயங்கின. ஆனால் இந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த பஸ்களில் இடம் பிடிக்க பயணிகள் முண்டியடித்து சென்றதால் பரபரப்பாக காணப்பட்டது.