பெங்களூரு: ஆக.22-சட்டவிரோத பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் பெங்களூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட 17 இடங்களில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியது. சித்ரதுர்கா எம்எல்ஏவும் நடிகருமான கே.சி. வீரேந்திர பாப்பியின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
பெங்களூரு, சல்லகேரே, சித்ரதுர்கா மற்றும் கோவா உள்ளிட்ட 17 இடங்களில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. பெங்களூரு வசந்த் நகரில் உள்ள எம்எல்ஏ வீரேந்திராவின் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சஹாகரி நகரில் உள்ள அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
10 அதிகாரிகள் கொண்ட குழு 3 இன்னோவா கார்களில் வந்து, சல்லகேரேயில் உள்ள எம்எல்ஏவின் வீடு உட்பட அவரது சகோதரர்கள் கே.சி. நாகராஜ் மற்றும் கே.சி. திப்பேசாமி ஆகியோரின் வீடுகளில் அதிகாலையில் சோதனை நடத்தியது.
சோதனையின் போது எம்எல்ஏ வீரேந்திர பாப்பி சிக்கிமில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
வீரேந்திர பாப்பிக்கு சொந்தமான பல நிறுவனங்களை குறிவைத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், ரத்னா கேமிங் சொல்யூஷன்ஸ், ரத்னா கோல்ட் கம்பெனி, ரத்னா மல்டிஸ்டோர்ஸ் கம்பெனி, பப்பி டெக்னாலஜிஸ் கம்பெனி, பப்பி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் மற்றும் பப்பி ஸ்பேர்பாக்ஸ் நிறுவனங்களில் சோதனை நடத்தினர். கேமிங் செயலிகள் தொடர்பாக சித்ரதுர்கா மற்றும் சல்லகேரில் பதிவான புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.















