பெங்களூர், அக்.14-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி இப்போதே முழு வீச்சில் தயாராகி வருகிறது இதன் ஒரு பகுதியாக மாநில கட்சியை மறு சீரமைப்பு செய்து கட்சி தொண்டர்களுக்கு புதிய ரத்தம் பாய்ச்ச முடிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலில் புது முகங்களை களம் இறக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய செயல் தலைவர் உட்பட புதிய நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய வியூகங்கள் வகுக்கப்பட்டு மாநில கமிட்டி சீரமைக்கப்படுகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தற்போதைய செயல் தலைவர்களாக உள்ள ஈஸ்வர் காந்த்ரே, பாலச்சந்திர ஜாரகிஹோளி, ராமலிங்கரெட்டி ஆகியோர் அமைச்சர்களாக உள்ளதால், அவர்களுக்கு தேர்தலில் கூடுதல் பொறுப்பு வழங்க மேலிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். கட்சியின் புதிய செயல் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர்கள் வினய் குல்கர்னி, வினய் குமார் சொரகே, முன்னாள் எம்எல்ஏ அஞ்சலி நிம்பல்கர் எம்பி ஜே.சி. சந்திரசேகர், மூத்த தலைவர் வசந்த்குமார் பெயர்கள் அடிபடுகிறது. வினய் குல்கர்னி, அஞ்சலி நிம்பல்கர், ஜே.சி. சந்திரசேகர், வினய் குமார் சொரகே, வசந்தகுமார் ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய செயல் தலைவர்களுடன், புதிய துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், செயலாளர்களும் நியமிக்கப்படவுள்ளதால், பல்வேறு மாவட்டங்களின் தலைவர்கள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.
பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அனைத்து ஜாதி மற்றும் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து, அவர்களை தேர்தலில் களமிறக்க வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
தசராவுக்குப் பிறகு, மாநகராட்சி வாரியத் தலைவர், துணைத் தலைவர் நியமனத்துடன், கேபிசிசியில் புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. பல்வேறு மாநகராட்சி வாரியங்களுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் முக்கிய செயல்வீரர்களை தலைவர், துணைத் தலைவர்கள் நியமனம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கடந்த வாரம் டில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, மாநகராட்சி வாரிய தலைவர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது