கர்நாடக தமிழக உறவு பாலமாக திகழும் தமிழ் பத்திரிகையாளர்கள்

பெங்களூரு, செப்.21: கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உறவுபாலம் அமைத்து வருகிறார்கள் என்று கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை இயக்குநரும், தமிழ் ஐஏஎஸ் அதிகாரியுமான மருத்துவர் வி.ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார்.
பெங்களூரு, குயின்ஸ் சாலையில் தினச்சுடர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்து, அவர் பேசியது: தமிழகத்தில் இருந்து குடியேறி, கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கு இடையே கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உறவுபாலம் அமைத்து வருகிறார்கள். கர்நாடகத்தில் பணியாற்றி வரும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் அனைவரும் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கமாக ஒன்றுகூடி செயல்படுவது பாராட்டுக்குரியது. தினச்சுடர் மாலை நாளிதழின் நிறுவனர் பா.சு.மணியின் புதல்வர் பா.தே.அமுதனின் தாராளமான கொடையுள்ளத்தோடு, கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு அலுவலகம் அமைத்துக்கொள்ள இடம் அளித்து உதவியிருக்கிறார். அவரையும் பாராட்டுகிறேன்.
இங்கு நான் ஐஏஎஸ் அதிகாரியாக அல்ல, விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளராக பேசிக்கொண்டிருக்கிறேன். முழு நேர எழுத்தாளராக வேண்டும் கனவுகண்டேன். அதற்காக விகடன் மாணவர் பத்திரிகையாளர் திட்டத்தில் இணைந்தேன். அத்திட்டத்தின்படி என்னை பகுதிநேர செய்தியாளராக சேர்த்துக்கொண்டார்கள். எனவே, பத்திரிகையாளர்களுக்கும் எனக்கும் இடையே நிலவும் உறவு மிகவும் ஆழமானது. இந்த அலுவலகத்தை அமைப்பதற்கு முன் கொட்டும் மழையில் இந்த இடத்தை வந்து பார்த்தேன். அதன்பிறகு, தினச்சுடர் ஆசிரியர் அமுதனை சந்தித்து, அவரது அலுவலகம் மற்றும் அச்சுக்கூடத்தை பார்வையிட்டேன். இளம் வயதில் பத்திரிகையாளனாக உருவாக்கிக்கொள்ள ஆசைப்பட்டு, 40 ஆண்டுகள் கடந்தபிறகு மீண்டும் பத்திரிகை அலுவலகத்தில் அமர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தவகையில் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தோடு எனக்கு ஏற்பட்டுள்ள உறவு மிகவும் ஆழமானதாக உணர்கிறேன். கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் அலுவலகத்தை திறந்துவைத்திருப்பது வரலாற்று சிறப்புவாய்ந்த நிகழ்ச்சியாகும். அந்த அலுவலகத்தை திறந்துவைக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியான தருணம். 10 மாதங்கள் கழித்து தான் தாயின் கருவறையில் இருந்து குழந்தை பிறக்கும். அந்தவகையில், கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்தபிறகு தாயின் கருவறையை போல அலுவலகம் கிடைத்திருக்கிறது. அதை அமுதன் அமைத்து தந்திருக்கிறார்கள். தாயின் கருவறையில் எண்ணங்களும், சிந்தனையும் சேர்ந்து ஒரு குழந்தை உருவாகிறதோ, அது போல, இந்த அலுவலகத்தில் நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் கொண்ட பல சீரிய செயல்கள் வடிவம் பெற வேண்டும். ஆக்கமும் ஊக்கமும் கொண்டு கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் செயல்பட வேண்டும். இங்கிருக்கும் இளம் பத்திரிகையாளர்களை பார்த்தபிறகு, இந்த சங்கம் நீண்டகாலம் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
60 ஆண்டுகளுக்கு முன் தினச்சுடர் மாலை நாளிதழை தொடங்கி பா.சு.மணி, தமிழ்ப்பணியாற்றியதுபோல, அவரது மகன் அமுதனும் தந்தைவழியில் தமிழ்ப்பணி ஆற்றிவருகிறார். அந்தவகையில், அமுதனும் வரலாற்றில் சிறப்பான இடத்தை பெற்றிருக்கிறார். சங்கத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அலுவலகம் அமைத்து தந்திருக்கிறார். கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் குழந்தையின் வளர்ச்சியை போல தானாக வளர வேண்டும். அடுத்தடுத்த உயரங்களை தொட வேண்டும்.
கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் வளர்வதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
பத்திரிகையாளரும் ஏழ்மையும் பிரிக்கமுடியாதவை என்று கூறப்பட்ட காலம் இருந்தது. புதுமைபித்தன் காலத்தில் இருந்து அப்படிதான் இருந்து வந்தது. அதை உடைத்தெறிந்து, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் முன்னேறி இருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் நினைத்தால் சமுதாயத்தில், அரசியலில் பல மாற்றங்களை கொண்டுவர முடியும்.இதற்கு ஏராளமான வரலாற்று சான்றுகள் உள்ளன. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களின் சிந்தனைகள் மிகப்பெரிய மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன. பாரதிதாசன் உள்ளிட்ட ஏராளமான இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்களாகவும் இருந்து சமுக மாற்றங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களால் என்ன செய்துவிடமுடியும் என்று நினைத்தார்கள். வாள்முனையைவிட பேனாமுனை கூர்மையானது. அந்த வகையில், எழுத்தாளராக, பத்திரிகையாளராக உங்களால் சமுதாயத்தை மாற்றியமைக்க முடியும். பத்திரிகையாளர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. சமுதாயமாற்றம், பொருளாதார மாற்றத்தை சங்கத்தின் வழியாக செயல்படுத்த முடியும் என்றார் அவர். தினச்சுடர், சஞ்சேவாணி மாலை நாளிதழின் ஆசிரியர் பா.தே.அமுதன் தலைமையில் நடந்தவிழாவில் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க துணைச்செயலாளர் வி.வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். சங்கச்செயலாளர் ஆ.வி.மதியழகன் அனைவரையும் வரவேற்க, துணைத்தலைவர் செந்தில்நாதன் நோக்கவுரை ஆற்றினார்.
அவரை தொடர்ந்து, சமூக செயற்பாட்டாளர்கள் கருணாநிதி, ராமச்சந்திரன், இரா.வினோத்,சங்கர்தாஸ் உள்ளிட்டோர் பேசினார்கள். கன்னட மூத்த பத்திரிகையாளர் எம்.எஸ்.மணி வாழ்த்துரை வழங்கினார். அதன்பிறகு, கர்நாடக அரசின் சுற்றுலாத்துறை இயக்குநர் மருத்துவர் வி.இராம்பிரசாத் மனோகர் பேருரை ஆற்றினார். விழாவில் தன்னுரிமை மனமகிழ் மன்றத்தலைவர் ராஜசேகர், தமிழ் ஆர்வலர்கள் விஜய்பூபதி, சாய்ரமணன், நவீன், யேசுதாஸ், சங்கத்தலைவர் முத்துமணி நன்னன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
டிச.1 முதல் 10-ஆம் தேதி வரை பெங்களூரில் நடக்கவிருக்கும் 2-ஆவது தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் கையேட்டை மருத்துவர் வி.ராம்பிரசாத் மனோகர் வெளியிட, தினச்சுடர் ஆசிரியர் அமுதன் பெற்றுக்கொண்டார். இறுதியில், சங்கப்பொருளாளர் க.தினகரவேலு நன்றி கூறினார்