கர்நாடக பிஜேபிக்கு தலைவலியாய்மாறிய ஈஸ்வரப்பா

பெங்களூரு: மார்ச் 18 கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா தனது கருத்துக்களாலும் நடவடிக்கைகளாலும் எப்போதும் பரபரப்பை கிளப்புவார்.கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்காததால் பாஜகவில் இருந்து விலகப்போவதாக எச்சரித்தார். பிரதமர் நரேந்திர மோடி அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து, தன்னுடைய முடிவை கைவிட்டார். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தனக்கு அல்லது தன் மகன் காந்தேஷூக்கு சீட் வழங்க வேண்டும் என கோரினார்.ஆனால் ஷிமோகா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு சீட் வழங்கப்பட்டது. அதனால் கோபமடைந்துள்ள ஈஸ்வரப்பா கடந்த இரு தினங்களாக தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
எடியூரப்பா சதி செய்கிறார்: இதுகுறித்து ஈஸ்வரப்பா கூறுகையில், ‘’ எனக்கு எதிராக எடியூரப்பா சதி செய்கிறார். என் மகனுக்கு சீட் வழங்காமல் அவரது மகனுக்கு சீட் வழங்கியுள்ளார். காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்வதாக கூறும் பாஜக தலைவர்கள் எடியூரப்பாவின் வாரிசு அரசியலை கேள்வி கேட்பதில்லை. ஒரு மகனுக்கு (விஜயேந்திரா) கட்சியின் மாநில‌ தலைவர் பதவி, இன்னொரு மகனுக்கு (ராகவேந்திரா) எம்.பி சீட் கொடுத்திருக்கிறார்.
தனக்கு நெருக்கமான மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலா ஜேவுக்கு பெங்களூரு வடக்கு தொகுதியை ஒதுக்கியுள்ளார். இன்னொரு ஆதரவாளர் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஹாவேரி தொகுதியை வாங்கி தந்திருக்கிறார். என்னை புறக்கணிக்கும் எடியூரப்பாவுக்கு பாடம்கற்பிக்க முடிவெடுத்துள்ளேன்.
தொண்டர் பலம்: ஷிமோகாவின் அவரது மகன் ராகவேந்திராவுக்கு எதிராக நான் சுயேச்சையாக போட்டியிட முடிவெடுத்துள்ளேன். இதனால் என்னை பாஜகவில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை. எனக்கு தொண்டர் பலம் இருப்பதால் நிச்சயம் வெற்றிப் பெறுவேன். இவ்வாறு ஈஸ்வரப்பா தெரிவித்தார். இவரது இந்த அறிவிப்பால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.