கர்நாடக பிஜேபியில் முக்கியத்துவம் பெறும் ஒக்கலிக்க சமூகத்தினர்

பெங்களூரு, நவ. 20: விஜயேந்திரா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, ஒக்கலிகா சமுதாய‌த்தைச் சேர்ந்த அவரது நெருக்கமான‌ முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பிரீதம் ஜே கவுடா (ஹாசன் தொகுதி), எல்.நாகேந்திரா (மைசூரில் சாமராஜா தொகுதி), ராஜேஷ் கவுடா (சிரா தொகுதி) ஆகியோர் கட்சியில் முக்கியத்துவம் பெற்று வருகின்றனர்.
‘ஆபரேஷன் தாமரை’ மூலம் பாஜக ஆட்சி அமைத்த பிறகு, 2020ல் நடந்த இடைத்தேர்தலின் போது விஜயேந்திரருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மூவரும், ஒக்கலிகா ஆதிக்கத்தில் இருந்த கே.ஆர்.பேட்டை, சிரா, ஆர்.ஆர்.நகர், யஷ்வந்த்பூர் மற்றும் மகாலட்சுமி லேஅவுட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை வெல்வதற்கு முக்கிய‌ பங்கு வகித்தனர்.பி.எஸ். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு மூவருக்கும் கட்சியில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. மேலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்த பின்னர் அவர்களின் அரசியல் வாழ்க்கை மந்தமாக இருந்தது.
இப்போது, ஒரு புதிய தலைமையின் கீழ் மாநில பாஜக‌ மறுசீரமைக்கப்படவுள்ள நிலையில், அவர்கள் மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இளம் வேட்பாளர்கள் களத்தில் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது. ஒக்கலிகா ஆதரவு கட்சியான மஜதவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், இந்த ஒக்கலிகா சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக ஹாசன், மண்டியா மற்றும் மைசூரு போன்ற இடங்களில் என்டிஏ வேட்பாளர்களின் வெற்றிக்கு தங்கள் பங்களிப்பைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு ஆதரவாக ஒக்கலிகா மற்றும் ஓபிசி வாக்குகளை ஒருங்கிணைப்பது என்ற முனைப்புடன் விஜயேந்திரா ஈடுபட்டுள்ளார். கடந்த காலத்தில் எங்கள் வேலையை கருத்தில் கொண்டு எங்கள் மீது நம்பிக்கை வைத்து கட்சியின் மாநிலத் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்களவைத் தேர்தலில் வெற்றிக்கான முயற்சியை முன்னெடுத்துச் செல்லுங்கள் என விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.ப்ரீதம் கவுடா உள்ளிட்ட 3 இளம் முகங்கள் தவிர, கட்சியில் சில மூத்தவர்களான‌ முன்னாள் துணை முதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் மற்றும் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோருக்கும் விஜயேந்திரா முன்னுரிமை அளிக்க விரும்புகிறார்.
புதிய இரத்தம் உட்செலுத்துதல் நிச்சயமாக கட்சிக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற கனவை நனவாக்க அனைத்து சமூகங்களுடனும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று அஸ்வத் நாராயண் கூறினார். இந்து மதத்தின் கருத்தியல் தளத்தில் சமூக நீதியை நிலைநாட்டி, அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்புகளை உறுதி செய்து கட்சியை வலுப்படுத்த இதுவே சரியான தருணம் என்றார் சி.டி.ரவி.மாநில பாஜகவின் தலைவராக விஜயேந்திரரை நியமிப்பதன் மூலம், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை நோக்கிச் சென்ற தனது லிங்காயத் வாக்கு வங்கியை மீட்டெடுக்க பாஜக பிரமுகர்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பது வெளிப்படையானது. ஆனால் புதிய ஒக்கலிகா முகங்களுடன், தெற்கு கர்நாடகாவில் உள்ள ஒக்கலிகா பெல்ட்டில் கால் பதிக்க விஜயேந்திரரும் நம்பிக்கையுடன் இருக்கிறார். மண்டியாவில் உள்ள புக்கனகெரே அவரது தந்தை எடியூரப்பாவின் பிறந்த இடம் என்பதால் அவருக்கு அப்பகுதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.