கர்நாடக பிஜேபி தலைவர் ஆவேச பேச்சு – பரபரப்பு

பெங்களூர், ஏப். 2- மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்றால் பயங்கரவாதிகளின் வாலுடன் தலையும் சேர்த்து துண்டிக்கப்படும் என கர்நாடகா மூத்த பாஜக தலைவர் சிடி ரவி எச்சரிக்கை விடுத்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவை சேர்ந்த பாஜகவின் மூத்த தலைவர் சிடி ரவி, தமிழ்நாட்டு பாஜக தலைவர்களுக்கும் மிக நெருக்கமானவர். தமிழ்நாடு விவகாரங்களிலும் அரசியலிலும் தலையிட்டு பல்வேறு கருத்துகளை தெரிவிப்பவர்.கர்நாடகா பாஜக தலைவர் பதவியை மிகவும் எதிர்பார்த்து ஏமாந்து போனவர். இதனால் பாஜக தலைமை மீது சற்று அதிருப்தியையும் வெளிப்படுத்தி வந்தார். அதேநேரத்தில் மேலிடத்தின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்க்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார் சிடி ரவி. பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சிடி ரவி கூறியதாவது: ராஜ்யசபா தேர்தலின் போது நசீர் உசேன் எம்பியின் ஆதரவாளர்கள், ஜிந்தாபாத் பாகிஸ்தான் என கோஷம் போட்டனர். ஆனால் காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் சித்தராமையாவும் துணை முதல்வர் டிகே சிவகுமாரும் பொய்யான தகவல்களையே தெரிவித்தனர். டிஜிஹள்ளி, கேஜி ஹள்ளியில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களையும் அப்பாவிகள்தான் என்றது காங்கிரஸ். இதனால்தான் ராமேஸ்வரம் கஃபேயில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. பாலைவன மாநிலமான ராஜஸ்தானை விட பெங்களூர் மாநகரில்தான் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. பெங்களூர் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. பிரதமர் மோடி நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்பார். மோடி மீண்டும் பதவியேற்கும் போது பயங்கரவாதிகள் வால் ஒட்ட நறுக்கப்படும். பயங்கரவாதிகளின் வால் மட்டுமல்ல தலையையும் சேர்த்து நரேந்திர மோடி துண்டித்துவிடுவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை விஷத்துடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார். யார் விஷம்? எந்த கட்சி விஷம்? என்பதை மக்கள் நன்றாகவே புரிந்தும் தெரிந்தும் வைத்துள்ளனர் என்பதை கார்கே உணர வேண்டும். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியைத் தழுவப் போகிறது. காங்கிரஸ் கட்சி அலுவலகங்களில் விளக்கு ஏற்றுவதற்கு கூட ஒருவரும் இல்லாத நிலைமைதான் உருவாகப் போகிறது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர வேண்டும். இவ்வாறு சிடி ரவி கூறினார்.