கர்நாடக பிஜேபி வேட்பாளர்கள் தேர்வு

பெங்களூர், ஜன.27-
பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கர்நாடக பிஜேபி தீவிரமாக களம் இறங்கி உள்ளது. வெற்றி வேட்பாளர்களை தேர்வு செய்யவும் வெற்றி வியூகங்களை வகுக்கவும் இன்று ஆலோசனை நடத்தியது. பெங்களூர் அரண்மனை மைதானத்தில் இன்று பிஜேபி நிர்வாக குழு கூட்டம் நடந்தது. கர்நாடக மாநில பிஜேபி தலைவர் விஜயேந்திரா முன்னாள் முதல்வர் எடியூரப்பா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷட்டர் உள்ளிட்ட பிஜேபி மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர். நிர்வாகிகள் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும், சாத்தியமான வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் நீண்ட விவாதம் நடைபெற்றது.
.இந்த செயற்குழு கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், வியூகம், வேட்பாளர்கள் தேர்வு, அமைப்பு ரீதியான பிரச்னைகள் குறித்தும், பெரும்பாலும் லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
தேர்தலை கருத்தில் கொண்டு. பிப்ரவரி மாதம் 9ம் தேதி முதல் பிஜேபி நடத்தும் கிராம சலோ நிகழ்ச்சியின் விளக்கங்கள், நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்வது குறித்தும் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.
கிராம சலோ நிகழ்ச்சியின் போது அனைவரும் தங்கள் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கியதாக பிஜேபி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த சட்டசபை தேர்தலின் போது கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவை மறந்து, லோக்சபா தேர்தலில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை இலக்காக கொண்டு செயல்படுவது என கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை வீடு வீடாகச் சென்று சேர்ப்பதற்கு என்னென்ன திட்டங்கள் வகுக்க வேண்டும், பாஜகவினருக்கு வீடு வீடாகச் சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மாநில பாஜக பி.ஒய். விஜயேந்திரர் நியமனம் செய்யப்பட்டதையடுத்து, புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பி.ஒய்.விஜயேந்திரர் தலைமையில் நடைபெற்ற முதல் செயற்குழு இதுவாகும், இதில், முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ்ஷெட்டர், பசவராஜ பொம்மை, மத்திய அமைச்சர்கள் பூபேந்திர யாதவ், பிரஹலாத் ஜோஷி, எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆர். அசோக், கோட்டா ஸ்ரீனிவாச பூஜாரி உட்பட அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். கர்நாடக மாநில பிஜேபி இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது