கர்நாடக மடாதிபதி சித்தேஸ்வர் சுவாமி மரணம்

பெங்களூரு:ஜன. 3-
கர்நாடக மாநிலம் விஜயாபுராவில் ஞானயோகேஸ்வரா மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சித்தேஸ்வர் சுவாமி (82). ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து உள்ள இவரை வடகர்நாடக மக்கள் நடமாடும் கடவுள் என்று அழைத்து வருகின்றனர். வயோதிகத்தால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை மடத்தின் ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் மடத்தை விட்டு வர மாட்டேன் என சித்தேஸ்வர் சுவாமி கூறியதால், அவருக்கு மடத்தில் வைத்தே டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் மடத்திற்கு நேரில் சென்று சித்தேஸ்வர் சுவாமியிடம் உடல்நலம் விசாரித்தார். மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியின் செல்போன் அழைப்பு மூலம் பிரதமர் மோடியும், சித்தேஸ்வர் சுவாமியின் உடல்நலம் விசாரித்தார். இந்நிலையில் நேற்றிரவு சித்தேஸ்வர் சுவாமியின் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. அவருக்கு டாக்டர்கள் உயிர் காக்கும் கருவிகள் மூலம் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று இரவு 10 மணி அளவில் உயிரிழந்தார். மறைந்த சித்தேஸ்வர் சுவாமியின் உடல் இன்று விஜயப்புராவில் உள்ள ஒரு பள்ளியின் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அங்கிருந்து அவரது உடல் ஊர்வலமாக மடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பின்னர் அங்கு அவரது உடலுக்கு மடத்தின் சம்பிரதாய முறைப்படி இறுதிச்சடங்குகள் நடத்தி மாலை 5 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.