கர்நாடக மந்திரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, செப்டம்பர். 7 – கர்நாடக மாநிலத்தின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி உமேஷ் விஸ்வநாத் கட்டி, மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 61. உமேஷ் கட்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்-மந்திரியும், உமேஷின் நெருங்கிய நண்பருமான பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநிலம் ஒரு நல்ல அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியை, ஆற்றல்மிக்க தலைவரை, விசுவாசமான பொது ஊழியரை இழந்துவிட்டது என்று வேதனை தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உமேஷ் கட்டி ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக இருந்தார், அவர் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினார். அவரது மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.