கர்நாடக மாநிலத்தில் 25 மாவட்டங்களில் அனல் காற்று ​

பெங்களூரு, மே 1: மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை முதல் ஐந்து நாட்களுக்கு அனல் காற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், 25 மாவட்டங்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீத‌ர், கலபுர்கி, விஜயபுரா, யாதகிரி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பெலகாம், கத‌க், தார்வாட், ஹாவேரி, கொப்பல், விஜயநகர், தாவணகெரே, சித்ரதுர்கா, தும்கூர், கோலார், மண்டியா, பெல்லாரி, ஹாசன், சாமராஜநகர், பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரக‌ம், மைசூரு, சிக்கமகளூரு, சிக்கபள்ளாப்பூர் ஆகிய மாவட்டத்தில் வெப்பச் சலனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 5 ஆம் தேதி வரை இந்நிலை தொடரும் என தெரிவித்துள்ளது.
சிக்கமகளூரு, குடகு, மைசூரு, மண்டியா, ராம்நகர் மற்றும் தும்கூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்டு இருக்கும். குடகு, மைசூரு, மண்டியா, சாமராஜநகர் மாவட்டங்களின் சில இடங்களில், வரும் 6 ஆம் தேதி முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெல்லாரி, சிக்கமகளூரு, சித்ரதுர்கா, ஹாசன், ஷிமோகா, தும்கூர், விஜயநகர், ராமநகரம், பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகரம், சிக்கபள்ளாப்பூர் மற்றும் கோலார் மாவட்டத்தின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 4 ஆம் தேதி வரை தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவும். புதன்கிழமை முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு, பாகல்கோட்டை, கலபுர்கி மற்றும் கொப்பல் ஆகிய பகுதிகளிலும் இரவில் வெப்பமான வானிலை இருக்கும்.செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, முந்தைய 24 மணி நேரத்தில் மாநிலத்தில் கலபுர்கியில் அதிகபட்ச வெப்பநிலை (42.8 டிகிரி செல்சியஸ்) பதிவாகியுள்ளது. பெங்களூரில் அதிகபட்சமாக மாலை 5.30 மணிக்கு 38.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களில் வெப்பம் மூன்று நாட்களில் 38 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது.