கர்நாடக மூத்த அரசியல்வாதிடி.பி. சந்திரகவுடா காலமானார்

பெங்களூர், நவ.7-
கர்நாடகாவில் மூத்த அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் டி பி சந்திரகவுடா வயது மூப்பு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார்.
இவருக்கு பூர்ணிமா என்ற மனைவியும், நான்கு மகள்களும் உள்ளனர். இவரது உடல்
அத்யந்தய்யா ரங்கமந்திராவில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
புதன்கிழமை தாரதஹள்ளியில் அவரது பூர்ண சந்திரா தோட்டத்தில், இறுதி சடங்கு நடைபெறுகிறது என, அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். பாட்டீல் பைரகவுடா, முத்தம்மா ஆகியோரின் மகனாக டி.பி .சந்திரேகவுடா 1936 ஆகஸ்ட் 26 ல் பிறந்தவர். இவர் சட்டம் படித்தவர். அதனால் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டவர்.
1971 ல் காங்கிரசில் இணைந்தார். சட்டசபை, மேலவை, லோக் சபை மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். 1971ல் சிக்மகளூர் எம்பி ஆனார். 1977 இரண்டாவது முறையும் எம்பி ஆனார் .
1978 ல் சிக்மகளூரில் இந்திரா காந்தி போட்டியிட வாய்ப்பு அளித்த போது, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, இந்திரா காந்தியை வெற்றி பெற செய்து, நாட்டின் கவனத்தை ஈர்த்தார். 1979 -80 ல் எம்.எல்.ஏ., ஆனார். தேவராஜ் அர்ஸ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றார்.
அரசியல் சூழ்நிலையில் அவர் கிராந்தி ரங்கா கட்சியில் சேர்ந்தார். 1980- 81 ல் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.
1983ல் ஜனதா கட்சியில் தீர்த்தள்ளி தொகுதியில் இருந்து எம்எல்ஏ ஆனார். 1983 – 85 ல் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அரசில், சபாநாயகராக பதவி வகித்தார்.

1986ல் ஜனதா கட்சியில் ராஜ்யசபா எம்.பி. ஆனார் 1987ல் தீர்த்தஹள்ளியில் இரண்டாவது முறையாக அவர் எம்எல்ஏ ஆனார்.

1999ல் காங்கிரஸ் வேட்பாளராக சிருங்கேரி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். 1999 – 2004 ஆகிய ஆண்டுகளில் எஸ்.எம் .கிருஷ்ணா தலைமையிலான அரசில், சட்ட அமைச்சராக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும் அப்போது சிக்மகளூர் மாவட்டம் பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.

2009ல் பிஜேபியில் சேர்ந்து பெங்களூர் வடக்கு தொகுதி எம்.பி. ஆனார்.

இப்படி தொடர்ந்து 40 ஆண்டுகள் அரசியல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தவர்.

2014 ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.