கலவரத்தில் 700 பேர் பலி? எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

டொடோமா: நவ. 1-
தன்சானியா நாட்டில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளை எதிர்த்து வன்முறை வெடித்தது. தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவை ஏற்க மறுத்து வெடித்த வன்முறையில் கடந்த 3 நாட்களில் 700 பேர் இறந்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் அக்டோபர் 29 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய அதிபரான சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி, தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டியது. இதனால், அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.
எதிர்க்கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் வன்முறை வெடித்துள்ளது. டார் எஸ் சலாம், மவான்சா, டொடோமா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்தனர். அவர்களை போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், போராட்டம் வன்முறையாக மாறியது. இதனையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதற்றச் சூழல் காரணமாக அந்நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இணையதள சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினரை வீதிகளில் நிறுத்தி பாதுகாப்பு ஏற்படுத்தி உள்ளது அந்நாட்டு அரசு. கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தெருக்களில் துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு நடக்கும் மோதலில் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தர் எஸ் சலாம் பகுதியில் 350 பேர் மற்றும் மவான்சா பகுதியில் 200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக பிரதான எதிர்க்கட்சியான சடேமாவின் செய்தி தொடர்பாளர் ஜான் ஜிடோகா தெரிவித்துள்ளார்.