கலாச்சார சின்னங்களை புனரமைப்பது அவசியம் – மோடி வலியுறுத்தல்

வாராணசி: டிச. 19
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்வர்வேத் மகாமந்திர் ஆலயத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து பேசியதாவது:
ஒரு காலத்தில் நாம் அடிமைமன நிலையில் இருந்தோம். தற்போது காலச் சக்கரம் மாறிவிட்டது. அந்த மன நிலையில் இருந்துமாறவேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகம் இந்தியாவை பெருமிதத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. அடிமைத்துவ காலத்தில் இந்தியாவை பலவீனப்படுத்த முயன்ற கொடுங்கோலர்கள் முதலில் நமது கலாச்சார சின்னங்களைத்தான் குறிவைத்து அழித்தனர். எனவே, சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பழைய கலாச்சார சின்னங்களை மீட்டெடுப்பதுடன், அவற்றை மறுகட்டமைப்பு செய்து புதுப் பொலிவேற்ற வேண்டியது தற்போது நமதுதலையாய கடமையாக மாறியுள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயம் இந்தியாவின் அழியாத பெருமைக்குஎடுத்துக்காட்டு . அதேபோன்று மகாகாள் மஹாலோக் நமது அழியாத தன்மைக்கு சான்று. கேதார்நாத் ஆலயம் வளர்ச்சியின் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. நம்முடைய கலாச்சார அடையாளங்களுக்கு நாம் மதிப்பளித்துஇருந்தால், நாட்டுக்குள் ஒற்றுமை மற்றும் சுயமரியாதை உணர்வு என்பது வலுவாக இருந்திருக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
சுதந்திரத்துக்குப் பிறகும் கூடசோம்நாத் ஆலய புனரமைப்புக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தது நினைவுகூரத்தக்கது. அந்த தீய சக்திகள் நாட்டில் பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது அந்த அவலநிலை மாறியுள்ளது.