கள்ளச்சாரய பலி 12 ஆக உயர்வு! 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

பாட்னா, ஆக.6- பீகாரில் சாப்ரா மாவட்டத்தில் உள்ள நோனியா தோலா கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 2) மத நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு சிலர் சட்டவிரோதமாக விற்கப்பட்ட உள்ளூர் சாராயத்தை அருந்தியுள்ளனர். அதில் இரண்டு பேர் சாராயம் அருந்திய இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதன் பக்கவிளைவாக, கள்ளச்சாராயம் அருந்திய பலருக்கும் கண் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராமானந்த் மஞ்சி, சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக உள்ளார். நோனியா தோலா கிராமத்தில் மஞ்சி என்பவர் கள்ள மதுபான ஆலையில் சாராயம் தயாரித்து விற்பனை செய்து வந்தார். அவர்களிடம் இருந்து 1,450 லிட்டர் சாராயம் மற்றும் ஸ்பிரிட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை வாங்கிக் குடித்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்துள்ளனர்.தற்போது, சாப்ரா மற்றும் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளில் 35 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில், அப்பகுதி காவல் எல்லைக்குட்பட்ட அதிகாரிகள் மீது நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.