கள்ளழகர் விழாவுக்கு கட்டுப்பாடு

மதுரை ஏப்.3- கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின் போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல் பைகளில் நறுமணநீர் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து, சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவது வழக்கம்.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி, தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி, தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, தங்கக்குதிரை வாகனம் மற்றும் சுவாமியின் விலைமதிப்பற்ற ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள், அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்ச தடை விதிக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை விதிக்கப்படுகிறது. பாரம்பரிய முறையில், தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்சி அடிக்க வேண்டும். தண்ணீர் பீய்ச்சி அடிக்க முன்பதிவு செய்ய வேண்டும். கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை இடையே எங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது. இதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், ஆணையரும் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகள், முதியோர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை காவல்துறையினர் அனுமதிக்கக் கூடாது. விதிகளை முறையாக பின்பற்றும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் உரிய நெறிமுறைகளை வகுக்க வேண்டும். உத்தரவை வரும் காலங்களிலும் முறையாக பின்பற்ற வேண்டும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.