கள்ள நோட்டு கும்பல் சிக்கியது: இருவர் கைது

பெங்களூர்: செப்டம்பர். 9 – தங்க சங்கலிகள் திருட்டு மற்றும் கள்ள நோட்டுகள் தயாரிப்பு கோஷ்டியில் ஈடுபட்ட இரண்டு கேரளாவை சேர்ந்த குற்றவாளிகளை ஜெ பி நகர் போலீசார் கைது செய்து தற்போது இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதீப் என்ற உன்னி மற்றும் சணல் ஆகியோர் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் . இவர்களிடமிருந்து 3.19 லட்ச ரூபாய்கள் மதிப்புள்ள 500 மற்றும் 2000 முக மதிப்பு கொண்ட கள்ள நோட்டுக்கள் மற்றும் 46 கிராம் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடந்து வருவதாக டி சி பி கிருஷ்ணகாந்த் தெரிவித்தார் . சில வருடங்களுக்கு முன்னர் வேலை தேடி பெங்களூருக்கு வந்திருந்த குற்றவாளிகள் இருவரும் பசவனப்புரா விலேஜில் தங்கியிருந்தனர். சமீபத்தில் ஜெ பி நகர் போலீஸ் சரகத்தில் தனியார் நிறுவன ஊழியர் ஷாந்தி என்பவர் வீட்டின் ஜன்னல் பக்கத்தில் மேஜை மீது வைத்திருந்த தங்க சங்கலி திருடு போனது. தவிர சென்னம்மா கெரே அச்சுக்கட்டு போலீஸ் சரகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணின் தங்க சங்கலி அபகரிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கொண்டு விசாரணை நடத்தியதில் மற்றும் சம்பவ இடங்களில் உள்ள சி சி டி வி கேமிராக்களை ஆய்வு செய்ததில் கிடைத்த நம்பகமான தகவலை வைத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரித்த போது பத்திரப்பதிவு காகிதங்களின் மீது 500 மற்றும் 2000 ரூபாய் முக மதிப்புள்ள நோட்டுகளை வண்ண செராக்ஸ் எடுத்து அச்சடித்து அசல் நோட்டுகள் என மாற்றிவந்துள்ளது தெரிய வந்துள்ளது. லட்சக்கணக்கான மதிப்பிலான கள்ள நோட்டுகள் தற்போது இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது . தவிர குற்றவாளிகள் கர்நாடகா மட்டுமின்றி கேரளாவிலும் சங்கலி அறுப்பு விவகாரங்களில் மற்றும் வீடு புகுந்து திருடியுள்ளது குறித்தும் வழக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது. திருடிய தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி தங்க கடைகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தில் இவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது என டி சி பி கிருஷ்ண காந்த் தெரிவித்தார்.