
கழுகுமலை: பிப்ரவரி 21
கழுகுமலை – குருவிகுளம் சாலையில் ஆதிதிராவிட பறையர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 18-ந்தேதி மாலை 6 மணிக்கு தீர்த்தகுடம் அழைத்து வருதல், இரவு 7 மணிக்கு பண்டாரப்பெட்டி அழைப்பு, இரவு 8 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் மருள் கொண்டாடிகள் சாமி ஆடி அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் இரவு 7 மணிக்கு பண்டாரப்பெட்டி அழைப்பு மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தி மருள் கொண்டாடிகள் சகிதம் இடுகாட்டு மாடன் சுடுகாடு செல்ல அனுப்புதல் மற்றும் நள்ளிரவு 2 மணி வரை பூஜைகள் நடந்தது. 20-ந் தேதி மாலை 5 மணிக்கு அம்மன் கோவிலில் இருந்து மருள் கொண்டாடிகள் சகிதம் பாரி வேட்டை களம் சென்று பூஜைகள் செய்து வழிபட்டு இரவு 9 மணிக்கு இடுகாட்டு மாடசாமிக்கு கிடா ஊட்டு குடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பறையர் சமுதாயத்தினர் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.