காங்கிரஸின் பலவீனமே பாஜகவின் பலம்

புதுடெல்லி,மே 11 நடைபெறும் நாடு தழுவிய மக்களவை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலவீனமே, பாஜகவின் பலமாக உள்ளது. இக்காரணத்தினாலேயே கடந்த 2 முறையும் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வியூகம், அக்கட்சியையும், கூட்டணி கட்சிகளையும் வெற்றி பாதையில் அழைத்து செல்கிறது. பாஜகவின் இந்த வியூகத்தை எட்டி பிடிக்க காங்கிரஸால் முடியவில்லை என்றே கூறலாம்.
பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக தேர்தல் மோதல் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, கோவா, உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் பாஜக மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது.
மேற்கண்ட 10 மாநிலங்களில் மொத்தம் 133 மக்களவை தொகுதிகளில் பாஜக கடந்த 2019-ல் 128 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது 96.24 சதவீதமாகும். வட இந்தியாவில் முக்கிய மாநிலங்களான உத்தரபிரதேசம் மற்றும் பிஹாரில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணுகின்றன. ஆனால், என்.டி.ஏ கூட்டணியில் பாஜக தலைமை தாங்கி வழி நடத்துகிறது.
ஆனால், இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் தலைமை சொல்லி கொள்ளும் படி இல்லை. 120 மக்களவை தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசம் மற்றும் பிஹாரில் கடந்த 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தம் 103 தொகுதிகளில் வெற்றி பெற்றது.இதில் பாஜக மட்டுமே 79 தொகுதிகளில் வெற்றி கொடி நாட்டியது. மேற்கண்ட இரு மாநிலங்களில் காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 85.83 சதவீதம் தொகுதிகளை கைப்பற்றினால், மீதமுள்ள காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வெறும் 14.16 சதவீதம் தொகுதிகளையே கைப்பற்றின.
நாட்டில் உள்ள மேற்கண்ட 12 மாநிலங்களில் 46.59 சதவீதம் மக்களவை தொகுதிகள் அடங்கி உள்ளன. இதில், 91.30 சதவீதம் தொகுதிகளை பாஜக கைவசம் வைத்துக் கொண்டு எதிரிகள் கொஞ்சம் கூட நெருங்க முடியாத தூரத்தில் உள்ளது.
முனை போட்டி: உத்தர பிரதேசத்தில் கடந்த முறை காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து களம் இறங்கி உள்ளது. இது மட்டுமே காங்கிரஸுக்கு ஆறுதல் தரும் விஷயமாகும். ஆனால், அதே சமயம், மேலும் சில மாநில கட்சிகள், சமாஜ்வாதி கட்சியின் கூட்டணியை விட்டு விலகி, அவை தற்போது பாஜக வுடன் கூட்டணி அமைத்துள்ளன.
மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால், வடக்கே அக்கட்சி பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். இந்த சூத்திரத்தை பாஜக நன்றாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருவதாக கடந்த 2 மக்களவை தேர்தலில்களின் முடிவே நமக்கு உணர்த்துகிறது.