காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு

புதுடெல்லி:மார்ச்‌.27- மக்களவைத் தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட சில எம்எல்ஏக்கள் அண்மையில் தமது கட்சிகளில் இருந்து விலகி,பாஜகவில் சேர்ந்தனர். இந்நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து கட்சியில் சேர்ந்தவர்களுக்கு அதே தொகுதியில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதேபோல், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுதிர் சர்மா, ரவி தாக்குர், ரஜிந்தர் ராணா, இந்தர் தத் லக்கன்பால், சேத்தன்யா சர்மா, தேவிந்தர் குமார் புட்டோ ஆகியோருக்கு அவரவர் தொகுதிகளில் போட்டி யிட கட்சி மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது.
இவர்கள் அனைவரும் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு கட்சி மாறி வாக்களித்தவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கட்சிக் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அவர்கள் 6 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் பாஜகவில் சேர்ந்து தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.