காங்கிரஸில் விலகல்… பாஜகவில் ஆஜர்… இது அஜய் கபூரின் ஆட்டம்

புதுடெல்லி, மார்ச் 14 – மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். அந்த வரிசையில், உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவும் 3 முறை எம்எல்ஏ பதவி வகித்தவருமான அஜய் கபூர் கட்சியிலிருந்து விலகி உள்ளார். தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிவிட்டதாக கபூர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜய் கபூர் அக்கட்சியில் இணைந்தார். அப்போது பாஜக மூத்த தலைவர்கள் உடன் இருந்தனர். பின்னர் அஜய் கபூர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் கடந்த 35 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் நேர்மையாக பணியாற்றினேன். இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்று என்னைப் பொருத்தவரை புதிய வாழ்க்கையின் தொடக்கம். பாஜக தலைமைக்காக நான் என் வாழ்நாளை அர்ப்பணிக்கிறேன். பிரதமர் மோடியின் குடும்ப உறுப்பினர் என்ற முறையில் நான் கட்சிக்கும் இந்த சமுதாயத்துக்கும் நேர்மையாக பணியாற்றுவேன். நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொருவரும் மோடியின் குடும்பத்தில் இணைய வேண்டும்” என்றார்.