காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் இலவசம்

சிக்கோடி, ஜன.11-
கர்நாடகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவக்குமார் அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஜனதா தளம்(எஸ்) ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்ததையடுத்து காங்கிரஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பிரஜாத்வானி யாத்திரையை இன்று தொடங்கியது. இது தொடர்பாக சிக்கோடியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், வீட்டில் இருளை போக்கும் வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசித்து இந்த யாத்திரையில் 5 வாக்குறுதிகளை அளிக்கிறோம் என்றார். அதில், ஒவ்வொரு வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பது முதல் உறுதி. நாங்கள் சொல்வதை தான் செய்வோம் கடந்த காலங்களிலும் இதற்கு உதாரணம் உண்டு. இது ஒரு வரலாற்று நாள். மாநில மக்களின் பிரச்சனைகள், வலிகள் மற்றும் கருத்துகளைச் சேகரித்து, அவற்றை எதிரொலித்து உங்களுக்கு வலிமையும், உங்கள் வாழ்வில் ஒளியும் கொடுக்க காங்கிரஸ் கட்சி இங்கு வந்துள்ளது. இந்த பிரஜாத்வனி யாத்திரையின் நோக்கம் மக்களின் துயரங்களை தீர்ப்பதே என்றார்.
1924 ஆம் ஆண்டில், காந்திஜி பெல்காமில் காங்கிரஸ் தலைவராக பதவியேற்றார், ஆங்கிலேயர்களை நாட்டிலிருந்து அகற்றி மக்களுக்கு ஒரு ஜனநாயக அமைப்பை வழங்க முடிவு செய்தார். இன்று அதே இடத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்கினோம் என்றார்.
பெல்காமில் உள்ள பா.ஜ.க.வின் அழுக்கை காந்தி கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு கழுவ இங்கு வந்துள்ளோம். உங்கள் வாழ்க்கையில் ஒரு சுடர் ஏற்றப்பட வேண்டும். விலைவாசி உயர்விலிருந்து நீங்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக மீண்டும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்றார்