காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் நடிகை விஜயசாந்தி

தெலங்கானா, நவ. 18- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பிரபல தெலுங்கு, தமிழ் திரைப்பட நடிகை விஜயசாந்தி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகியிருந்த இவர், தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். பாஜவில் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய விஜயசாந்தி முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். ஆனால் அக்கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி பின்னர் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் அதிலிருந்து விலகி தெலங்கானாவில் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியில் இணைந்தார்.
சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் பாஜவில் இணைந்தார். ஆனாலும் அவர் எந்த பாஜ கூட்டங்களிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். இதற்கிடையே கடந்த ஆண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார். பாஜ தேசிய தலைவர்கள் தெலங்கானாவுக்கு வந்தாலும், விஜயசாந்தி கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு பாஜ மேலிடம் சீட் ஒதுக்கவில்லை. இந்நிலையில் தனது எக்ஸ்தள முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை திடீரென நீக்கினார். இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தெலங்கானா மாநில பாஜ தலைவர் கிஷண்ரெட்டிக்கு கடிதம் அனுப்பினார். அதில், பாஜவில் இருந்து தான் வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தெலுங்கானாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தித்த நடிகை விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் கொடியை போர்த்தி கட்சியில் இணைத்துக் கொண்டார். தெலங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் இந்த இரு கட்சிக்கும் இடையே இழுபறி நிலவும் எனக்கூறி வரும் நிலையில் பாஜவில் இருந்து விஜயசாந்தி வெளியேறி காங்கிரசில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.