காங்கிரஸ் கொடி இல்லாமல் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி

வயநாடு: ஏப்ரல் 16
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.ஆனால் கேரளாவில் இருதரப்பினரும் நேருக்குநேர் மோதுகின்றனர். அந்த மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆனி ராஜா, பாஜக சார்பில் அதன் மாநிலத் தலைவர் சுரேந்திரன் களமிறங்கி உள்ளனர்.வயநாடு மக்களவைத் தொகுதியில் முஸ்லிம்கள் 45 %, இந்துக்கள் 41%, கிறிஸ்தவர்கள் 13% பேர் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் 65 சதவீத வாக்குகளுடன் ராகுல் காந்தி அமோக வெற்றி பெற்றார்.
அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸின் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பச்சை வண்ண கொடிகள் பிரதானமாக இடம்பெற்றன. இவை பாகிஸ்தான் கொடிகள் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்ததற்கு ‘கொடி’ விவகாரம் மிக முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் கடந்த 3-ம் தேதிவயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சிகளின் கொடி பறக்கவில்லை.
ராகுலின் புகைப்படம் அச்சிட்ட பேனர்களே இடம்பெற்றன.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஹாசன் கடந்த 13-ம் தேதி நிருபர்களிடம் கூறும்போது, “வயநாடு மக்களவைத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கொடியை பயன்படுத்த மாட்டோம். கட்சியின் சின்னத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.இதற்கான காரணத்தை கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.