காங்கிரஸ் செயற்குழுவில் வியூகம்

புது டெல்லி : பிப்ரவரி. 24 – மல்லிகார்ஜுன கார்கே காங்கிரசின் தேசிய தலைவராக பொறுப்பேற்றபின்னர் முதல் முறையாக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூட உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கியமாக மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கருத்துக்கள் கூறியதன் தொடர்பாக ராய்பூருக்கு செல்லும் வழியில் பவன் கேரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ள நிலையில் காங்கிரசின் 85 வது செயற்குழு கூட்டம் சட்டிஸ்கர் தலைநகரில் இன்று துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழுக்களுக்கு தேர்தல்கள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டங்களில் 2024 பாராளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது , பி ஜே பிக்கு எதிரான கட்சிகளை தங்களுடன் ஒருங்கிணைப்பது , மற்றும் சமீபத்தில் தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையை ஒப்புக்கொள்வது , மற்றும் அவர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயற்குழுவிற்கு ஒப்புதல் அளிப்பது ஆகிய விவகாரங்கள் விவாதிக்க பட உள்ளன. ஆனாலும் இன்று நடக்க உள்ள இந்த முக்கிய கூட்டத்திற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா, ராகுல் மற்றும் ப்ரியங்கா மூவரும் கலந்து கொள்வதாக இல்லை என தெரிகிறது. பாரத் ஜோடோ யாத்திரைக்கு பின்னர் புத்துணர்ச்சி அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்த முதல் செயற்குழு கூட்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. இன்று காலை 10 மணிக்கு கூடும் கூட்டத்த்தில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவிற்கு தேர்தல் நடத்த வேண்டுமா கூடாதா என்பது பற்றி முடிவு செய்யும். வரும் 26 அன்று பிற்பகல் 2 மணிக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் உரை நிகழ்த்த உள்ளதுடன் அன்று மாலை 4 மணிக்கு பொது கூட்டமும் நடக்க உள்ளது.