காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகனுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல்

பெங்களூரு, மார்ச் 29- காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக பெங்களூரு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், “எனது வீட்டுக்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அதில் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. கடந்த தேர்தலின்போது சித்தாப்பூர் பாஜக வேட்பாளர் மணிகண்ட ரத்தோட் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இப்போது பாஜக ஆதரவாளர்களும் இந்துத்துவ‌வாதிகளும் எனக்கு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளனர். என்னை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் எச்சரித்துள்ளனர். எனது பிணத்தின் மீது இந்த தேர்தலை நடத்த பாஜகவினர் விரும்புகின்றனர். அவர்களின் மிரட்டலை கண்டு நான் அஞ்சப்போவதில்லை. ஜனநாயகத்தின் குரலை நெறிக்க முயலும் இந்துத்துவவாதிகளுக்கு மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்” என்றார். இந்நிலையில் பெங்களூரு விதான சவுதா போலீஸார் பிரியங்க் கார்கேவின் புகாரின்பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.