காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி

புதுடெல்லி,ஆகஸ்ட். 28 –
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் தேதி குறித்து இன்று நடைபெறவுள்ள காங்கிரஸ் காரிய கமிட்டியில் முடிவெடுக்கப்படவுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் அசாதாராண சூழல் நிலவி வருகிறது. பல்வேறு மூத்த தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக பதவி விலகி வருகின்றனர். சமீபத்தில் கபில் சிபில், அமரிந்தர் சிங், குலாம் நபி ஆசாத் ஆகியவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகினர். இதில் குலாம் நபி ஆசாத் 50 ஆண்டு காலம் காங்கிரஸில் பயணித்து, கடந்த 26ஆம் தேதி விலகினார். மேலும் அவரது விலகல் கடிதத்தில் ராகுல் காந்தி மீது சரமாரி குற்றச்சாட்டுகள் முன்வைத்திருந்தார்.இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவருடன் பிரியங்கா காந்தியும் சென்றுள்ளார். குலாம் நபி ஆசாதின் விலகல் தொடர்பாக எந்திவித அறிக்கையும் காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிடவில்லை.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் தலைவரை தேர்தல் அட்டவணையை இறுதி செய்வது தொடர்பாக கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பாரத் ஜோடோ யாத்ரா எனப்படும் நடைபயண பரப்புரை இருப்பதால், தலைவர் தேர்தல் சில வாரம் தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு 21 மற்றும் செப்டம்பர் 20 ஆகிய தேதிகளுக்கு இடையே நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டம் நடத்தப்படும். மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றுள்ள சோனியா காந்தி, அவருக்கு உதவியாக சென்றுள்ள ராகுல், பிரியங்கா ஆகியோரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் சார்பில் அடுத்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ பாத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ராகுல் பங்கேற்கிறார். இதன் காரணமாக, தலைவர் தேர்தல் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘காங்கிரசுக்கு தலைமை தாங்குபவர், நாடு முழுவதும் அறியப்பட்டவராக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் கட்சியில் இப்போது இல்லை. ராகுல் காந்தி ஒருவரே இருக்கிறார்.
கட்சி தலைமையை ஏற்கும்படி அவரை கட்டாயப்படுத்துவோம். சோனியா காந்தியை மூத்த தலைவர்கள் கட்டாயப்படுத்தியதால்தான், அவர் தலைவர் பொறுப்பை ஏற்றார்,’ என தெரிவித்தார்.