காங்கிரஸ் தலைவர் தேர்தல்

புது டெல்லி : செப்டம்பர். 15 – அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17 அன்று நடக்க உள்ள தேர்தலில் தலைவர் பட்டத்தை யார் அலங்கரிக்க போகிறார்கள் என்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர் சசிதரூர் , மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோரின் பெயர்கள் தலைவர் பதவிக்கு தற்போது அடிபட்டு வருகிறது. காங்கிரஸ் தற்காலிக தலைவி சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு சென்றவர் நாளை டெல்லிக்கு திரும்ப உள்ளார். இது தொடர்பாக முன் வரும் சில நாட்களில் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து தொடர் கூட்டங்கள் நடக்க உள்ளன. எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவேண்டியுள்ளது . தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும் அதே வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்த அனைத்து வளர்ச்சிகளுக்கிடையேயும் காங்கிரஸ் தலைவர் வேட்பாளரை இறுதி செய்யவேண்டியுள்ளது . இந்த நிலையில் சோனியா டெல்லிக்கு திரும்பிய உடன் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தி ஏகமனதான வேட்பாளரை தேர்வு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. ஜி – 23 தலைவர்கள் குழுவின் உறுப்பினராக உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஷஷி தரூர் தலைவரின் தேர்தலை நியாயமான முறையில் மற்றும் வெளிப்படையாக நடத்த வேண்டும் என தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார். இப்போது ஷஷி தரூரே தலைவர் வேட்பாளராகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நாளை நாடு திரும்ப உள்ள சோனியாவை ஷஷி தரூர் சந்திக்க உள்ளார். இத்துடன் மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த அவர் முற்பட்டுள்ளார் . வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவல்களின்படி தேர்தல்களில் காந்தி குடும்பம் ஆதரவை தெரிவித்த பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்பாளரை ஜி – 23 குழு தலைவர்கள் இறுதி செய்ய உள்ளனர். இம்மாதம் 24 மற்றும் 30க்குள்ளாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வாய்ப்புகள் உள்ளன.


கடந்த 2019-ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பதவி ஏற்றார்.இந்தநிலையில், முழுநேர தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், அக்டோபர் 17-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இம்மாதம் 24-ந் தேதி முதல் 30-ந் தேதிவரை நடக்கிறது. இந்தநிலையில், காங்கிரசின் உட்கட்சி தேர்தல் பிரிவு தலைவர் மதுசூதன் மிஸ்திரி தலைமையில், மாநில அளவில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், திட்டமிட்டபடி, புதிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் தேர்தலை இம்மாதம் 16-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு மதுசூதன் மிஸ்திரி உத்தரவிட்டார்.மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகளுக்கும் ‘கியூஆர்’ கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை அளிக்குமாறு கூறினார்.இத்தேர்தலில் மொத்தம் 9 ஆயிரத்துக்கு மேற்பட்ட பிரதிநிதிகள் ஓட்டுப்போட உள்ளனர். இவர்களின் பெயர்கள் 20-ந் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு, பட்டியல் வெளியாகும். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி இன்னும் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. அதனால், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் பெயர் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. அவர் சோனியாகாந்தி குடும்பத்தினரின் நம்பிக்கையை பெற்றவர். ஆனால், சோனியாகாந்தி குடும்பத்தினர் அல்லாத வெளிநபர் நிறுத்தப்பட்டால், தானும் போட்டியிட போவதாக சசிதரூர் எம்.பி. அறிவித்துள்ளார். வாக்களிப்பவர்கள் பட்டியலை வெளியிடுமாறு அவர் கோரியுள்ளார். வேட்புமனு ஏற்கப்பட்டவுடன், வாக்காளர் பட்டியல் நகல் அளிக்கப்படும் என்று தேர்தல் பிரிவு உறுதி அளித்துள்ளது.