காங்கிரஸ் பிஜேபி தொண்டர்கள் மோதல் 36 பேர் மீது வழக்கு பதிவு

பெங்களூர் : மார்ச். 18 – கோவிந்தராஜநகர் சட்டமன்ற தொகுதியில் பேனர்கள் கட்டுவதில் காங்கிரஸ் மற்றும் பி ஜே பி தொண்டர்களுக்கிடையே நேற்று நடந்த கலாட்டா தொடர்பாக கோவிந்தராஜநகர் போலீஸ் நிலையத்தில் மூன்று தனி புகார்கள் பதிவாகியுள்ளன. கோவிந்தராஜநகரில் நேற்று மாலை பேனர்கள் பொருத்துவதில் காங்கிரஸ் மற்றும் பி ஜே பி தொண்டர்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இரண்டு போலீசாரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த தலைமை கான்ஸ்டபிள் ஹெச் சி வரதராஜு அளித்த புகாரின் அடிப்படையில் 36 காங்கிரஸ் மற்றும் பி ஜே பி தொண்டர்களுக்கு எதிராக வழக்கு பதிவாகியுள்ளது. இதே வேளையில் காங்கிரஸ் பிரமுகர் பிரேமலதா மற்றும் பி ஜே பி பிரமுகர் ரம்யா ஆகியோரும் தனித்தனியாக புகார் பதிவு செய்துள்ளனர். விஜயநகரில் உள்ள எம் சி லே அவுட்டின் பி ஜிஎஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கிரஸ் மற்றும் பி ஜே பி தொண்டர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் எம் எல் ஏ ப்ரியா கிருஷ்ணா ஆதரவாளர்கள் அமைச்சர் சோமண்ணா ஆதரவாளர்களை தாக்கியதாக தெரியவருகிறது . இந்த கலவரத்தில் பிஜேபி தொண்டர்கள் பலர் காயமடைந்திருப்பதுடன் இவர்களுக்கு விஜயநகர அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது. நாளை காங்கிரஸ் நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. ஆனால் காங்கிரஸ் நிகழ்ச்சியை புறக்கணித்து வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக பி ஜே பி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வேளையில் தொண்டர்களுக்கிடையே நடந்த வாக்கு வாதங்கள் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது.