காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அறிவிப்பு

டெல்லி: மார்ச்.7-காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கு பின்னர் காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோக் சபா தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாக உள்ளது. தேர்தல் தேதி வெளியிடும் முன்பாகவே அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக கடந்த வாரம் 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் இதில் அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இந்த பட்டியலில் தமிழகத்திலும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவு செய்யாத நிலையில், வேட்பாளரை அறிவித்து, எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இதனிடையே, இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் இன்று வேட்பாளர் பட்டியலை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முக்கிய தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், பிரியங்கா காந்தி ரேபரலி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி களமிறங்கும் தொகுதிகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.