காசாவிலிருந்து வெளியேறிய 4.23 லட்சம் பேர்; குடிநீர் இல்லாமல் தவிப்பு

டெல் அவிவ்: அக். 13 கடந்த வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் தீவிரவாதிகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இந்தச் சூழலில் இன்று (அக்.13) தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்தப் போரினால் காசாவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகள் மோசமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவு நிலவரப்படி காசா பகுதியில் இருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா.வின் அங்கமான மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (Office for the Coordination of Humanitarian Affairs) இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
காசா பகுதியில் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள், மருத்துவமனைகள் என எதையும் விட்டுவைக்காமல் இஸ்ரேலியப் படைகள் தாக்கிவரும் சூழலில் உயிருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். கடைசித் தகவலின்படி காசாவிலிருந்து 4 லட்சத்து 23 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர்.
முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள்: கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலில் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் பல சேதமடைந்துள்ளன. காசாவில் இருந்து இதுவரை வெளியேறியவர்களில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாலஸ்தீனத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஐ.நா.வின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 27 ஆயிரம் பேர் பாலஸ்தீன அரசு ஏற்படுத்தியுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சுமார் 1.50 லட்சம் பேர் காசாவின் தெற்கில் மைதானங்களில், பொது கட்டிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதுவரை இஸ்ரேல் தாக்குதலில் 752 குடியிருப்பு கட்டிடங்களும், பிற கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன. 1948-க்குப் பின்னர் இதுவே இந்தப் பிராந்தியத்தின் மிக மோசமாக தாக்குதல் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.