காசாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு

காசா, ஜூன் 9- இஸ்ரேல்-பாலஸ்தீன போரில், புதியதாக 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். உயிரிழந்தவர்கள் 4 பேருமே பொதுமக்கள்தான். நிவாரண உதவியை வாங்க, GHF உதவி மையத்தின் அருகே குவிந்தபோது சந்தேகத்தின் பேரில் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். உதவி மையத்தின் அருகே இஸ்ரேல் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். உதவியை பெற வந்தவர்களை ராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். ஆனால் மக்கள் உணவுக்காக நீண்ட நேரமாக காத்திருப்பதால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தவில்லை. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளது. இதில் 4 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) என்ற புதிய அமைப்பு, காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. ஆனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே உணவு, மருந்துகள் விநியோகிக்கப்படும் என்றும், மற்ற நேரங்களில் இது போர் நடக்கும் பகுதியாக கருதப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை, தெற்கு ரஃபாவுக்கு அருகே உள்ள மனிதாபிமான உதவி மையத்தின் அருகே மக்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். அப்போதுதான் அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மனிதாபிமான உதவி மையங்களுக்கு அருகே தாக்குதல் நடத்தப்படுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் இது முதல்முறையல்ல. தொடர்ந்து இதுபோன்று பல சம்பவங்கள் தெரிய வந்திருக்கின்றன.