காசாவில் 50,000 பேருக்கு4 கழிவறைகள் மட்டுமே

டெல்லி: நவ. 9 காசா நிவாரண முகாம்களில் பணிபுரிந்துவிட்டு கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் ஒருவர், தனது சக ஊழியர்கள் குறித்தும், தன்னுடைய பணி அனுபவம் குறித்தும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். காசாவின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் கடந்த அக்.7-ஆம் தேதி தொடங்கிய போர், 30 நாட்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. காசாவில் உள்ள தங்குமிடம், மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். போர் கொடூரமடைந்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மோசமடைந்து வருகிறது.
இந்த நிலையில், காசாவில் பணிபுரிந்துவிட்டுக் கடந்த வாரம் அமெரிக்காவுக்குத் திரும்பிய செவிலியர் எமிலி கலாஹான் என்பவர் தனது சக ஊழியர்கள் குறித்து உருக்கமான அனுபவங்களை ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியாக அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “காசா நிவாரண முகாம்களில் தங்கி பணியாற்றும் சக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாங்கள் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தும், அந்த இடத்தில் தங்கி பணியாற்றுகிறார்கள். மக்களுக்காகச் சேவை செய்கின்றனர். அவர்கள்தான் நிஜமான ஹீரோக்கள்.
காசாவில் பாதுகாப்பான இடம் என்று ஒன்றுகூட கிடையாது. எங்களைச் சுற்றிலும் குண்டுகள் வெடித்தன. என்னுடன் பணியாற்றிய சில சக ஊழியர்கள் ஒரு நொடி கூட மக்களை விட்டு வெளியேறவில்லை. அங்கிருந்த குழந்தைகளின் முகம், கழுத்து, கைகால் முழுவதும் தீக்காயங்கள் இருந்தனர். மருத்துவமனைகள் நிரம்பி இருந்ததால், அவர்கள் சிகிச்சை பெறாமல் அங்கேயே இருந்தனர். 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருந்த ஒரு முகாமில் நான்கு கழிவறைகள் மட்டுமே இருந்தன. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் தண்ணீர் விநியோகிக்கின்றன.