காசாவுக்கு இந்தியா நிவாரணம்

காஜியாபாத்:நவ 20- இஸ்ரேல் போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதி மக்களுக்கு உதவ, விமானப் படையின் சி-17 ரக சரக்கு விமானத்தில் 2-வது முறையாக இந்தியா நேற்று நிவாரண பொருட்களை அனுப்பியது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரால் காசா பகுதியில் பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். காசாவின் தெற்கு பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின்சாரம், தண்ணீர், எரிபொருள் இன்றி தவிக்கின்றனர். இஸ்ரேல் குண்டு வீச்சு காரணமாக ஏராளமானோர், பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்து தவிக்கின்றனர். படு காயங்களுடன் மருத்துவ வசதியின்றி பலர் அவதிப்படு கின்றனர்.
கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. மின்சாரம், எரிபொருள் இல்லாததால் கடல்நீரை சுத்திகரிக்கும் ஆலைகள் எல்லாம் இயங்கவில்லை. உப்புத் தண்ணீர், மற்றும் அசுத்தமான நீரை பருகுவதால், பல குழந்தைகள் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுதான் கிடைக்கிறது. நிவாரண முகாம்களில் வழங்கப்படும் பேரீச்சம்பழம், பிஸ்கட், பாஸ்தா ஆகியவற்றை சாப்பிட்டு உயிர்வாழ்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 15 நாட்களுக்கு ஒரு முறை குளிக்கின்றனர். குளிப்பதற்கு குறைவான தண்ணீர் கிடைப்பதால் பெண்கள் தங்கள் முடியை வெட்டிக் கொள்கின்றனர்.
காசா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு, பல நாடுகள் நிவாண பொருட்களை அனுப்பி வருகின்றன. இந்த பொருள்கள் எகிப்து நாட்டின் ரஃபா எல்லை வழியாக காசா பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. காசா பகுதி மக்களுக்கு உதவ இந்தியா ஏற்கனவே 38 டன் நிவாரண பொருட்களை விமானப்படையின் ஜம்போ விமானம் மூலம் அனுப்பியது.
32 டன் பொருட்கள்: இந்நிலையில் 2-வது முறையாக இந்தியா நேற்று 32 டன் நிவாரண பொருட்களையும், 6.5 டன் மருந்து பொருட்களையும் விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் விமானத்தில் நேற்று அனுப்பியது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் காசா பகுதிக்கு கொண்டு செல்லப்படும். இந்தியா அனுப்பியுள்ள நிவாரண பொருட்களில் வலி நிவாரண மாத்திரைகள், கூடாரங்கள், படுக்கை விரிப்புகள், தார்பாலின் ஷீட்டுகள், துப்புரவுக்கு தேவையான பொருட்கள், தண்ணீரை சுத்தப்படுத்தும் மாத்திரைகள், உயிர் காக்கும் மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் இதர தேவையான பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.