காசாவை கைப்பற்ற இஸ்ரேல் மும்முனை தாக்குதல்

ஜெருசலேம்: அக்.16 வடக்கு காசாவில் இருந்து 11 லட்சம் மக்கள் வெளியேறுவதற்கான கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், காசா மீது மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி உள்ளது. ‘ஹமாஸ்’-இன் கண்ணிவெடியை தகர்க்கும் ‘டெடி பீர்’ புல்டோசர்கள் களம் இறங்கியுள்ளன. உச்சகட்ட போர் தீவிரமாவதால், இஸ்லாமிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டம் வரும் 18ம் தேதி நடக்கிறது.
கடந்த 7ம் தேதி பாலஸ்தீன ‘ஹமாஸ்’ தீவிரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலால் 250 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் கடுமையான வான்வெளி தாக்குதலை நடத்தியது. கடந்த ஒரு வாரமாக நடக்கும் இந்த போரில், இதுவரை இஸ்ரேல் தரப்பில் 1,300 பேரும், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியர் தரப்பில் 2,230 பேரும் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. அவற்றை முழுமையாக அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது. இதற்காக வடக்கு காசா பகுதியில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் 24 மணி நேரத்தில் தெற்கு காசா பகுதிக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் கெடு விதித்தது.
இந்த கெடு நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்தது. எனினும் மனிதாபிமான அடிப்படையில் நேற்று மாலை 4 மணி வரை (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) வடக்கு காசா பகுதி மக்கள் பாதுகாப்பாக வெளியேற காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி சுமார் 4 லட்சம் மக்கள் வடக்கு காசாவில் இருந்து வெளியேறி தெற்கு காசாவில் தஞ்சமடைந்து உள்ளனர். கார்கள், கழுதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளாக அவர்கள் தெற்கு காசாவை சென்றடைந்தனர். பொதுமக்கள் இடம் பெயர்ந்தபோது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 70 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.காலக்கெடு நிறைவடைந்த நிலையில், காசா முனை பகுதிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சென்றார்.
அங்கு முகாமிட்டுள்ள இஸ்ரேலிய வீரர்களிடம் அவர் பேசும்போது, ‘அடுத்த கட்டத்துக்கு நாம் தயாராகிவிட்டோம்’ என்று தெரிவித்தார். மூத்த தளபதிகளுடன் கலந்துரை யாடினார். தொடர்ந்து பாலஸ்தீனத்தின் வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று இரவு தரைவழி தாக்குதலை தொடங்கியது. சுமார் ஒரு லட்சம் இஸ்ரேல் வீரர்கள், 300 பீரங்கிகள் வடக்கு காசா பகுதியில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர்.
வீடுவீடாக சென்று தீவிரவாதிகளை சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.
வடக்கு காசா எல்லைப் பகுதிகள் முழுவதும் ஹமாஸ் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்துள்ளனர். இவற்றை எதிர்கொள்ள இஸ்ரேல் ராணுவம், ‘டெடி பீர்’ என்றழைக்கப்படும் அதிநவீன புல்டோசர்களை முன்வரிசையில் நிறுத்தி உள்ளது. எதிரிகளை சுட்டு வீழ்த்த தானியங்கி துப்பாக்கிகள், சிறிய ரக குண்டுகளை வீசும் பீரங்கி அமைப்புகள், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசும் கருவிகள் உள்ளிட்டவை புல்டோசரில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த ஆயுதங்கள் மூலம் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி கொண்டே புல்டோசர்கள் முன்னேறி செல்லும். அனைத்து கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கும்.
‘டெடி பீர்’ புல்டோசர்கள் முன்னே செல்ல இஸ்ரேல் ராணுவ வீரர்கள் வடக்கு காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் நுழைந்து ஹமாஸ் தீவிரவாதிகளின் முகாம்கள், கட்டிடங்களை தரைமட்டமாக்கி வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜோனதான் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 1,000 இடங்கள் மீது தாக்குதல்களை நடத்தி உள்ளோம். காசா பகுதியின் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.
வடக்கு பகுதி மக்கள் தெற்கில் தஞ்சமடைந்து வரும் நிலையில், வடக்கு காசா பகுதியில் பதுங்கியிருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளை தரை, வான், கடல் வழியாக ஒருங்கிணைத்து தாக்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி உள்ளது.
எந்த நேரத்திலும் தாக்குதலை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் குரல் எழுப்பி வரும் நிலையில், ஈரான் வெளிப்படையாகவே ஹமாஸ் அமைப்பினரை ஆதரித்து வருகிறது. இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால், போர் மூளும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கத்தார் நாட்டின் தோஹாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை சந்தித்தார். இந்த நிலையில் இஸ்ரேல் – காசா போர் குறித்து விவாதிப்பதற்காக, இஸ்லாமிய நாடுகளின் உயர்மட்ட குழுவான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓஐசி) அவசர அசாதாரண ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தற்போதைய தலைமையை ஏற்றுள்ள சவுதி அரேபியா தலைமையில் அவசர அசாதாரண கூட்டம் வரும் 18ம் தேதி ஜெட்டாவில் நடைபெறுகிறது.
காசா மக்களுக்கு ஏற்பட்டுள்ளது அச்சுறுத்தல், மனிதாபிமான உதவிகள், போர் சூழல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. நான்கு கண்டங்களில் பரவியுள்ள 57 இஸ்லாமிய நாடுகளின் உறுப்பினர்கள், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். வளைகுடா அண்டை நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ ஆகியவை இஸ்ரேலுடன் உறவை பேணி வருகின்றன. அந்த உறவில் சவூதி அரேபியாவையும் சேர, அந்நாட்டிற்கு அமெரிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.