காசா எல்லையில் ஐ.நா. பொதுச் செயலாளர்

ரஃபா: அக்டோபர் . 21 – ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணி குத்தேரஸ் நேற்று எகிப்து-காசா எல்லையான ரஃபாவுக்கு சென்றார். அங்குள்ள அல் ஆரிப் விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திறங்கிய நிவாரண பொருட்கள் அவர் ஆய்வு செய்தார்.
இந்த நிவாரண பொருட்கள் அடங்கிய 200 லாரிகள் ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் கூறும்போது, “அடுத்த சில நாட்களில் காசா பகுதிக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படும்” என்றார்.போரினால் பாதிக்கப் பட்டுள்ள காசா மக்கள் தொடர்பாக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி ஏற்பாட்டின் பேரில் கெய்ரோவில் இன்று அமைதி மாநாடு நடைபெறுகிறது.
இதில் இத்தாலி பிரதமர் மெலோனி, கிரீஸ் பிரதமர் கிரியா கோஸ், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்லஸ் மற்றும் பல்வேறு முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த எகிப்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்று சீன அரசு அறிவித்துள்ளது.