காசா போரில் சேதமடைந்த கப்பல்களுக்கு இழப்பீடு: இஸ்ரேல்

டெல் அவிவ்: அக்.27- காசா போரின் காரணமாக இஸ்ரேல் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் பல சேதமடைந்த நிலையில் அவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். பாராக்ளைடர்கள் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். இதுவரை இஸ்ரேலியர்கள் 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் வசம் உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதலில் காசாவில் 7028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் ஹமாஸின் இந்த எண்ணிக்கை மீது அமெரிக்கா சந்தேகம் எழுப்பியுள்ளது. பிணைக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்டவர்களில் 50 பேர் இஸ்ரேல் தாக்குதலில் இறந்துவிட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஆனால் இதை இஸ்ரேல் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை.
இதுஒருபுறம் இருக்க ஹமாஸை அழித்தொழிப்போம் என்று சூளுரைத்த இஸ்ரேல் முன்னேறி வருகிறது. முழுவீச்சில் தரைவழித் தாக்குதல் நடத்த ஆயத்தமாக இருக்கிறது. தற்போது நடைபெறும் சிறிய தரைவழித் தாக்குதல் வெறும் ஒத்திகை என்று பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.