காசி விஸ்வநாதர் கோயிலில் நாளை குடமுழுக்கு

சென்னை: செப் 9 தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில், பல கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில், 1,000-வது கும்பாபிஷேகமாக சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் செப். 10-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோயில்களை சீரமைத்து பாதுகாக்கும் வகையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலிலும்,300 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் சாத்தனஞ்சேரி கரியமாணிக்க பெருமாள் கோயிலிலும், 150 ஆண்டுகளுக்குப் பிறகுராணிப்பேட்டை தக்கோலம் கங்காதீஸ்வரர்கோயிலிலும், 100 ஆண்டுகளுக்குப் பிறகுபல கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் 100 ஆண்டுகளுக்கும் முற்பட்ட 30-க்கும் மேற்பட்டகோயில்களிலும், தருமபுர ஆதினத்தைச் சேர்ந்த 27 கோயில்களில் 23 கோயில்களுக்கும், கடந்த 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
1,000-வது கும்பாபிஷேகம்: இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறையின் 1,000-வது கும்பாபிஷேகமாக சென்னை மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில்குடமுழுக்கு செப்.10-ல் நடைபெறுகிறது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ளகாசி விசாலாட்சி சமேத விஸ்வநாதர்கோயிலை, பக்தர்கள் வாராணசியில் உள்ளவிஸ்வநாதர் கோயிலாகவே போற்றுகின்றனர். 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக்கருதப்படும் இக்கோயில் ‘மகாபில்வஷேத்ரம்’ என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் நிறைய மகா வில்வ மரங்கள் இருந்ததால் மாம்பலம் என்று பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. காலப்போக்கில் ‘மாவில்’ என்றும் பின்னர் ‘மாம்பலம்’ என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. மயிலைக்கு மேல் அம்பலம் (மயிலைக்கு மேற்கே உள்ள இடம்) என்று கருதப்பட்டதால் இது மேல்-அம்பலம் என்று மாறியது. தற்போது மேல் மாம்பலம் என்றும், மேற்கு மாம்பலம் என்றும் அழைக்கப்படுகிறது.
மகாபிலத்தில் சுயம்பு லிங்கம் தோன்றியகாலத்தில் மக்கள் அதற்கு கோயில் எழுப்பினர். விஜய நகரப் பேரரசைச் சேர்ந்தநாயக்க மன்னர் ஒருவர் காசியில் வழிபட்டபிறகு, அவரது கனவில் சிவபெருமான் தோன்றி தனக்கு கோயில் எழுப்பப் பணித்தார். அதன்படி தென்காசியிலும் சென்னை மேற்கு மாம்பலத்திலும் காசி விஸ்வநாதருக்கு கோயில் எழுப்பப்பட்டது.

மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர்கோயில் 2 கோபுரங்களைக் கொண்டது.கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜ கோபுரமும்,தெற்கில் 3 நிலை கோபுரமும் கொண்டுஇக்கோயில் அமைந்துள்ளது. பலிபீடம், த்விஜஸ்தம்பம், நந்திதேவரைக் கடந்துசென்றால் கருவறையில் சிறிய வடிவிலானகாசி விஸ்வநாதரை தரிசிக்கலாம்.