காசோலை மோசடி வழக்கில் சரிதா நாயர் கைது


திருவனந்தபுரம், ஏப். 22- கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோலார் பேனல் மோசடி விவகாரத்தில் சிக்கியவர் சரிதா நாயர். முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி மீது பாலியல் புகார் கூறியதன்மூலம் பிரபலமானார். இவர் மீதான சோலார் பேனல் மோசடி வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இவர் சிலருக்கு வழங்கிய காசோலைகள் பணமின்றி திரும்பி வந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு சரிதா நாயர் ஆஜராகவில்லை. தொடர்ந்து பலமுறை விசாரணைக்கு செல்லாததால் அவருக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து கோழிக்கோடு போலீசார் இன்று திருவனந்தபுரம் வந்தனர். காலையில் சரிதா நாயர் வீட்டுக்கு சென்ற அவர்கள் அவரை கைது செய்தனர். இன்று பிற்பகல் அவர் கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்.