காஞ்சி சங்கராச்சாரியார் முக்கிய பங்கு

புதுடெல்லி: டிச. 22- உத்தரபிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், ஜனவரி 22-ல் திறக்கப்படுகிறது. இந்த விழாவின் முக்கிய விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்கிறார். இக்கோயில் அமைக்கும் பணியில் காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தற்போதைய சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
ஜெயேந்திரர், தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ராமர் கோயில் கட்டுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். இக்கோயில் பணியில் பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்குடன் இணைந்திருந்தார். கடந்த 2002-ல் பாபர் மசூதி மற்றும் ராமர் கோயில் வழக்கின் வாதிகளான இந்து-முஸ்லிம்களிடம் சமாதானம் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முயன்றார். இவரது முயற்சி வெற்றிபெறவில்லை. எனினும் அதற்கு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆதரவு அளித்திருந்தார். இதன் காரணமாக, அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரருக்கும் ஒரு நினைவுச்சிலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி மூத்த பண்டிதர்களில் ஒருவரான தமிழர் சந்திரசேகர் திராவிட் கூறும்போது, “வாராணசி காசி விஸ்வநாதர் கோயிலில் அதை கட்டிய ராணி அஹில்யாபாய் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதுபோல், அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் ஜெயேந்திரர் நினைவாக அவருக்கும் ஒரு சிலை வைக்கப்பட வேண்டும். இதை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வலியுறுத்தி இருந்தார்” என்றார்.