காணாமல் போன பா.ஜனதா பெண் தலைவர் கொலை- ஆற்றில் பிணம் வீச்சு

மகாராஷ்டிர ஆக. 12 மாநில பா.ஜனதாவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் கணவரால் கொலை செய்யப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.சனா கான் தனது கணவர் அமித் என்ற பப்பு ஷாவை பார்க்க ஜபால்புர் சென்றுள்ளார். அப்போது பண பரிமாற்றம் தொடர்பாக இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அமித் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதுடன், சாலையோர உணவகமும் நடத்தி வந்துள்ளார். நாக்பூரில் இருந்து ஜபால்புர் சென்ற சனா கானுக்கும் அவருக்கும் இடையில் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜபால்புரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்ற அமித், சனா கானை அடித்து கொலை செய்துள்ளார். மேலும், உடலை ஹரின் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். நாக்பூர் மற்றும் ஜபால்புர் போலீசார் இணைந்து, விசாரணை மேற்கொண்டு அமித்-ஐ கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணையில், ‘’சானாவும் அமித்தும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பணம் தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. நாக்பூரில் இருந்து ஜபால்புர் வந்து தகராறில் ஈடுபட்டபோது, கணவரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்’’ எனத் தெரியவந்துள்ளது.