காணும் பொங்கல் சென்னையில் 17,000 போலீசார் பாதுகாப்பு

சென்னை: ஜன. 17: காணும் பொங்கலை ஒட்டி சென்னைமுழுவதும் 17,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். நவீன ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் கடைசிநாளான இன்று காணும் பொங்கலை ஒட்டி பெரும்பான்மையான மக்கள் சுற்றுலாத் தலங்களுக்கு விரும்பிச் செல்வது வழக்கம்.
இதையொட்டி சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் சென்னை மாநகர்முழுவதும் 15,500 போலீஸார், 1500ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக கடற்கரை பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள், கடலோர காவல் குழுமத்தின் கடற்கரை உயிர்காக்கும் பிரிவின் 85 போலீஸார் அடங்கிய தனிப்படையும் கடலோர பகுதிகளைக் கண்காணிக்க உள்ளன.
உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு 13 கேமராக்கள் கூடுதலாகப் பொருத்தப்பட்டுள்ளன. காந்தி சிலை வரை 3 இடங்களில் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் கடற்கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, குதிரைப் படையினருடன் கடற்கரை மணல் பரப்பில் செல்லக்கூடிய 3 வாகனங்கள் மூலமாக போலீஸார் ரோந்து பணியில் ஈடுபடுவர்.குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போவதைத் தடுப்பதற்காக அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை காவல் உதவி மையங்கள், தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகளில் வழங்கப்படுகின்றன. இந்த அடையாள அட்டையில் பெற்றோர் பெயர், முகவரி, தொலைபேசி எண்ஆகியவை குறிப்பிடப்பட்டு, குழந்தைகளின் கைகளில் கட்டிவிடப்படும்.எனவே குழந்தைகளுடன் வரும்பெற்றோர் அடையாள அட்டையைபெற்றுக் கொண்டு கடற்கரைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.மெரினாவை போல, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் முகம் அடையாளம் காணும் மென்பொருளுடன் கூடிய நவீன தொழில்நுட்ப ட்ரோன் கேமராக்களில் குற்றங்களைத் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 8 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.