
புதுடெல்லி: அக். 28-
டெல்லி, திமார்பூர் காந்தி விஹார் பகுதியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம் கேஷ் மீனா (32). இவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வுக்காக படித்து வந்தார். இவரும் தடய அறிவியல் கல்லூரி மாணவியான அம்ரிதா சவுகானும் (21) லிவிங் டுகெதர் முறையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி ராம் கேஷ் மீனாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்தது. போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது வீட்டில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸார் நடத்திய விசாரணையில் அது ராம் கேஷ் மீனாவின் சடலம் என்பது தெரியவந்தது.
இந்நிலையில், அவர் தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ராம் கேஷ் மீனாவுடன், அம்ரிதா சவுகான் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் சிக்கிய பதிவுகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தியபோது தீவிபத்துக்கு முன்னதாக 2 பேர், ராம் கேஷ் மீனாவின் வீட்டுக்கு வந்ததும், தீவிபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் 3 பேர் வெளியேறியதும் தெரியவந்தது. அதில் ஒருவர் அம்ரிதா என்பதை போலீஸார் கண்டறிந்தனர். இந்நிலையில் போலீஸார் அவரை கடந்த 18-ம் தேதி கைது செய்தனர்.
அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது முன்னாள் காதலர் சுமித் காஷ்யப், நண்பர் சந்தீப் குமார் ஆகியோருடன் இணைந்து ராம் கேஷை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 21-ம் தேதி சுமித்தும், 23-ம் தேதி சந்தீப்குமாரும் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ராம் கேஷ், அம்ரிதா ஆகியோர் லிவிங் டுகெதர் முறையில் கடந்த மே மாதம் முதல் இங்கு வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அம்ரிதாவின் நிர்வாண வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அதை தனது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் ராம் கேஷ் சேகரித்து வைத்திருந்தார்.
இதை அறிந்த அம்ரிதா அதை தன்னிடம் கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார். மேலும், அந்த வீடியோக்களை அழிக்குமாறு ராம் கேஷிடம், அம்ரிதா கூறியபோது அதை அவர் ஏற்கவில்லை.
இதையடுத்து சந்தீப், சுமித் ஆகியோருடன் இணைந்து ராம் கேஷை கொலை செய்யத் திட்டமிட்டார் அம்ரிதா. இதைத் தொடர்ந்து 5-ம் தேதி சுமித், சந்தீப் இருவரும் வீட்டுக்கு வந்து ராம் கேஷை அடித்துக் கொலை செய்தனர். பின்னர் சடலத்தை வீட்டில் போட்டுவிட்டு, கேஸ் சிலிண்டரை திறந்து விட்டுள்ளனர். தீயை பற்ற வைத்து விட்டு மூவரும் தப்பியுள்ளனர்.
போலீஸார் வந்து விசாரணை நடத்தினாலும், அது தீவிபத்து போல்தான் தெரியவரும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். அம்ரிதா, தடய அறிவியல் மாணவி என்பதால் சாட்சியங்கள் இல்லாமல் கொலை செய்வது எப்படி என்பதை அறிந்துள்ளார். ராம் கேஷின் உடலில் எண்ணெய், நெய், ஒயின் ஆகியவற்றை ஊற்றி பற்ற வைத்துள்ளனர். மேலும், வீட்டின் கம்ப்யூட்டரிலிருந்த ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களுடன் தப்பியுள்ளனர். ஆனால், சிசிடிவி கேமரா அவர்கள் செய்த குற்றத்தை காட்டிக்கொடுத்துவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.















