காதலுக்காக ரூ.2,484 கோடி சொத்துகளை உதறி தள்ளிய பெண்

புதுடெல்லி, ஆக. 12- மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங் (78) மற்றும் முன்னாள் மிஸ் மலேசியா பாலின் சாய் ஆகியோரின் ஒரே மகள் ஏஞ்சலினா. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் ஆவார். இது உயர்தர சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட முதலீட்டு நிறுவனமாகும். கூ கே பெங் 2015 ஆம் ஆண்டில், போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தார்.
அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. கூ கே பெங் மகள் ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாக கூறப்படுகிறது. ஏஞ்சலினா தனது காதலை பற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களை கூறி ஏஞ்சலினா காதலை அவரின் தந்தை ஏற்கவில்லை. இதன் விளைவாக தனது பரம்பரை சொத்துகள் அனைத்தையும் உதறி விட்டு வெளியேறி தனது காதலரை திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். ஏஞ்சலினாவும், ஜெடிடியாவும் 2008-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் ஏஞ்சலிலினா தனது பெற்றோரின் விவாகரத்தின்போது நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டார். அப்போது அவர் மீண்டும் தனது தந்தையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்தபோது, குடும்பத்தை பார்த்துக்கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலிலினா கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் ஏஞ்சலிலினாவின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏஞ்சலிலினா கூறும்போது நாம் விரும்பினால் எப்போதும் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அன்பு விலைமதிப்பற்றது. பணம் பல எதிர்மறை குணங்களுடன் வருகிறது. பிரச்சனைகள் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அன்பு மட்டுமே மகிழ்ச்சியைத் தரும் என்று கூறி உள்ளார்.