காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பாலக்காடு: செப். 21-
கண்ணூர் அருகே உள்ள கறிவெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 29). இவரது மனைவி சூர்யா (24).இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் ராகேஷ், தன்னுடைய மனைவி சூர்யாவை வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதற்கு ராகேஷின் தாய் சந்திராவும் உடந்தையாக இருந்து வந்து உள்ளார். இதுகுறித்து அவ்வப்போது தனது பெற்றோர்களுக்கு சூர்யா செல்போன் மூலம் கணவன் மற்றும் மாமியார் கொடுமைகளை குறித்து கூறி அழுது உள்ளார். இந்த நிலையில் நேற்று சூர்யா தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதோடு தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ராகேஷ் மற்றும் மாமியார் சந்திரா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.