காமராஜருக்கு பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: ஜூலை . 15 – காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தங்களது டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘திரு காமராஜர் அவர்களை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மறக்கவொண்ணா பங்களிப்பு செய்தவர், கனிவும் அக்கறையும் கொண்ட சிறந்த நிர்வாகி. ஏழ்மையை ஒழிக்க மக்களின் துயரைப் போக்க கடினமாக உழைத்தவர். சுகாதாரம், கல்வியை மேம்படுத்த கவனம் செலுத்தியவர்,’என புகழாரம் சூட்டியுள்ளார். இதனை பிரதமர் மோடி தமிழிலும் ஆங்கிலத்திலும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.