காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகல்

பிரிஸ்பேன், ஜன.12-
இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக, காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று உள்ளன. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டி நேற்று டிரா ஆனது. இதனால் 4வது மற்றும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணியே போட்டி தொடரை கைப்பற்றும்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குயின்ஸ்லாந்து மாகாணத்தின் தலைநகரான பிரிஸ்பேனில் வருகிற 15ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்காக சிட்னியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி இன்று பிரிஸ்பேன் புறப்பட்டு செல்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை பாதிப்பு காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே காயம் காரணமாக இசாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகிய நிலையில் பும்ராவும் விலகி இருப்பது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பும்ராவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதியனது. ஆனால், இந்தக் காயம் பெரிதாக மாறிவிடக் கூடாது என்பதால், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் 4-வது டெஸ்ட் போட்டியில் பும்ரா கலந்து கொள்ளாதது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பும்ரா இல்லாத நிலையில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.